Friday, 8 May 2020

சித்ரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்கிறது. நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது. தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர்.
கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங் களைப் பெற்று வளர்ந்தது.

சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

No comments:

Post a Comment