பைரவருக்கு கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந்தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைரவரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.
அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத்தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்றதால் பைரவர் மகிழ்ச்சி அடைந்தார். அவரை அந்த திருத்தலத்தில் ஸ்வேத விநாயகரும், இந்திரனும் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் ஆனந்தகால பைரவர் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வழங்கி, மனக்குறையை அகற்றி அருள்புரிந்து வருகிறார்.
இந்த தலத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment