Tuesday, 26 May 2020

கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி


இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி. இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்  அகத்தியர் முனிவர்.

அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான். அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் அகத்தியர் முனிவர். அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள். அவர் வேண்டியபடியே அசுரனை அழிக்கும் சக்தியையும் வழங்கி அருள்பாலித்தாள். அசுரனை அழித்த முனிவர், தனக்குப் பேரருள் புரிந்த துர்கை அம்மனை அனுதினமும் வழிபட்டு வந்தார்.

காசிக்குச் செல்ல விரும்பினார் அகத்தியர் முனிவர். ஆனால், காசிக்குச் சென்றுவிட்டால், துர்கையம்மனை வழிபட முடியாதே என கலங்கினார். அவருடைய கலக்கத்தை அகற்ற திருவுளம் கொண்ட துர்காதேவி, அனுதினமும் இரவுப் பொழுதில் காசிக்கு வந்து முனிவருக்குத் தரிசனம் தருவதாக திருவாக்கு தந்தாள். அதன்படியே, இன்றைக்கும் கோயில் கருவறை விதானத்தில் இருக்கும் துளை வழியே, தினமும் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் காசிக்குச் சென்றுவருவதாக, சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

இந்த முனிவர் பெருந்தகை தனக்கு சக்தி தந்த அன்னையை, ‘வாழ்வளித்த அன்னை வனதுர்கா’ என்று போற்றினாராம். அதன் காரணம் தொட்டு, இந்த அம்பிகைக்கு வனதுர்கை என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

அரக்கர்கள் தாங்கள் பெற்ற வரத்தால் மூவுலகங்களையும் ,மும்மூர்த்தியரையும்  தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

இந்த அசுரர்களை அழிக்க வேண்டி, மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் ஆதி பராசக்தியின் அருள் வேண்டி மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர்.

இந்த யாகத்தின் பலனாகத் தோன்றிய அம்பிகை, தன் அம்சத்துடன் தேவாதிதேவர்கள் அனைவரது அம்சத்தையும் இணைத்து துர்கையாக அவதரித்து, மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோரை வதம் செய்தாள்.

பின்னர் ஏகாந்தியாக இந்த ஆலயத்தில் உலக நன்மைக்காக தாமரை பீடத்தின்மேல் மங்கலம் தரும் மகாலக்ஷ்மியாக அருள்புரிகிறாள்.


இந்தத் திருத்தலத்துக்கு கதிராமங்கலம் எனும் பெயர் ஏற்படவும் ஒரு காரணக் கதை உண்டு.

இவ்வூரின் அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. அவரது இல்லத்தின் கூரை பழுதுபட்டிருந்தது. ஒரு மழைக் காலத்தின் இரவுப் பொழுதில், வனதுர்கையை மனதால் துதித்த கம்பர், அன்னையின் அருள் தன்னைக் காக்கவேண்டும் என்று பிரார்த்தனை விட்டு உறங்கிப்போனார்.

மறுநாள் காலையில், அவரது இல்லத்தின் கூரை நெற் செய்து கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார் கம்பர். இது அன்னை நிகழ்த்திய அற்புதமே என்று உணர்ந்தவர், வனதுர்கையை ‘கதிர்தேவி’, ‘கதிர்வேந்த மங்கள நாயகி’ என்றெல்லாம் போற்றித் தொழுதார். இதையொட்டியே இந்த ஊருக்கும் கதிராமங்கலம் எனும் பெயர் வாய்த்ததாம்.

ராகுபகவானின் இஷ்ட தெய்வம் துர்கை. எனவே அவர் துர்கையை பூஜை செய்யும் காலத்தில் (ராகு காலத்தில்), நாம் அவளை வழிபடுவது கூடுதல் விசேஷம்


இவ்வாறு அடியார்கள் பலருக்கும் அருள்செய்த அம்பிகை, நமக்கு அருள்செய்யவும் காத்திருக்கிறாள்.

No comments:

Post a Comment