குத்தாலம் அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயம்! விக்கிரம சோழ மன்னன், இந்த ஆலயத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்ததால் அவனுடைய பெயரைக் கொண்டே ஈஸ்வரர், ‘சோழீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். அதற்கு முன் வரை அக்னீஸ்வரர் எனவும், திருத்தலத்துக்கு அக்னீசம் என்றும் பெயர் இருந்து வந்தது. அக்னி பகவான் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளார்.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள்.
இறைவனின் திருமணத்தை தரிசிக்க வந்தவர்தான் அக்னி பகவான்.சில காலம் அங்கேயே தங்கி வந்தார்.அந்தக் காலகட்டத்தில், தன்னைப் பற்றி மற்றவர்கள் அடிக்கடி பேசி வரும் ஒரு விஷயம் அக்னி பகவானுக்கு மிகுந்த உறுத்தலாகவே இருந்தது. ‘பாழாப் போன நெருப்பு பட்டு கை சுட்டிருச்சு...’, ‘வீடே தீப்பிடிச்சு எரிஞ்சு சாம்பல் ஆயிடுச்சு...’ என்றெல்லாம் தன்னைப் பற்றி எல்லோரும் துக்கப்படுகிறார்களே... ஆனால், நாமோ பஞ்சபூதங்களுள் ஒன்றாகப் பெருமையுடன் தேவலோகத்தில் விளங்குகிறோம். பூலோகத்தில்தான் சாபத்துக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிறோம் என்று கவலைப்பட்டார். இதிலிருந்து முற்றிலுமாக விடுபட விரும்பினார். இந்தக் கோரிக்கையை சொன்னவாறு அறிவாரிடமே வைத்து, மிகுந்த சிரத்தையுடன் தவம் இருந்து அவரை வழிபட்டார். நல் உணவு சமைத்து தம்பதி சமேதராக விளங்கும் ஈசனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார். இறைவன் தனக்கு அருளும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
தூய பக்தியுடன் வழிபடும் எவரையும் அரவணைத்து அருள்பவர் அல்லவா அந்த ஆதிசிவன்? அக்னியின் வழிபாட்டில் நெகிழ்ந்தார். ஒரு நாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். மகிழ்ந்தார் அக்னி பகவான். தன்னை நினைத்துப் பிரார்த்தனை செய்யக் காரணம் என்ன என்று வினவினார் மகேசன். அக்னி பகவானும் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பழிச் சொல் குறித்து பலவாறும் விளக்கிச் சொன்னார்.
‘‘கவலை வேண்டாம்... உனது பிரார்த்தனையும் எண்ணமும் நிறைவேறும். இங்கிருந்து தென்கிழக்குத் திசையில் ஓர் ஆலயம் எழுப்பு. திருக்குளம் வெட்டு. அங்கு என்னை வழிபடு. உனது பிரார்த்தனை பூர்த்தி ஆகும்’’ என்று ஆசீர்வதித்து மறைந்தார்.
நெருப்புக்கு அதிபதியான அக்னி பகவான் மனம் குளிர்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு, ஈசன் சொன்ன இடத்தை அடைந்தார். விக்கிரகம் வடிப்பதில் தேர்ந்த தேவலோகச் சிற்பிகளை வரவழைத்து இறைவனுக்கும் இறைவிக்கும் விக்கிரகம் வடித்தார். பரிவார தேவதைகளையும் அமைத்தார். திருக்கோயிலுக்கு எதிரே திருக்குளம் வெட்டி, அதில் கங்கை, காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து நிரப்பினார். ஆகம முறைப்படி வழிபாடுகளைத் துவக்கினார். சித்திரைத் திருநாள் முதல் அனைத்து உற்சவங்களையும் ஆரம்பித்து வைத்தார்.
அப்பனும் அம்மையும் அகம் மகிழ்ந்தனர். அக்னி தேவன் தங்களை அனுதினமும் ஆராதிப்பது கண்டு அவன் முன் மீண்டும் தோன்றி அருள, இறைவன் திருவுளம் பூண்டார். ஒரு தினத்தில் அக்னி பகவான், ஈசனை மனமார வழிபட்டுக் கொண்டிருக்கும்போது லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்டார் ஈசன். ‘‘அக்னி தேவா... உனது அயராத இறை பக்தியில் மகிழ்ந்தோம். எம் சொல்லுக்கு இணங்கி, இங்கு வந்து கோயில் எழுப்பிய உனது பக்தி கண்டு பெருமிதம் கொண்டோம். கேள், என்ன வேண்டும்?’’ என்றார்.
அக்னி பகவான் மண்டியிட்டு நின்றார். ‘‘இறைவா... உனது அன்பே எனக்கு என்றென்றும் வேண்டும். இந்தப் புனிதக் குளத்தில் மூழ்கி வழிபடும் பக்தர்களது துயரைத் தாங்கள் போக்க வேண்டும். அவர்களது பாவங்களை விலக்க வேண்டும். உனது பொருட்களைத் திருடுபவரது குலம் நாசம் அடைந்து, அவர்கள் நரகத்தில் உழல வேண்டும்’’ என்றவர் கடைசியாக, தனது தனிப்பட்ட வேண்டுகோளையும் வைத்தார். ‘‘மகேசா... என்னால் தீண்டப்பட்ட பொருட்களை நான் சுடுகின்ற காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் என்னை பாவம் சூழ்கிறது. அதில் இருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூயவனாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.‘‘அனைத்து வரங்களையும் இக்கணமே நிறைவேற்று கிறோம்’’ என்று அக்னிக்கு அருளிவிட்டு, லிங்கத் திருமேனியில் புகுந்தார் இறைவன். அக்னி பகவான் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அன்று முதல் இந்தத் தலம் ‘அக்னீஸ்வரம்’ என்றும், இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்றும், அவர் வெட்டிய திருக்குளம் ‘அக்னிக் குளம்’ எனவும் வழங்கப்படலாயிற்று.
விக்கிரம சோழனின் மனைவியாகிய கோமளை, வெண்குஷ்ட நோயால் பெரும் அவதிப்பட்டு வந்தாள். தன் மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வந்து, நோய் அகல பிரார்த்தித்து வந்தான் விக்கிரம சோழன்.
பிரார்த்தனையும் பலித்தது. ஒரு சுப தினத்தில் கோமளையின் உடலில் இருந்த வெண்குஷ்ட நோய் முற்றிலும் அகன்று புதுப் பொலிவுடன் ஆனாள். சோழர்கள் குடும்பமே பெரிதும் மகிழ்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக, இந்த ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டான் விக்கிரம சோழன். ஆலய வழிபாடு தங்கு தடை இல்லாமல் நடைபெறுவதற்காக வெவ்வேறு ஊர்களில் விளை நிலங்களை எழுதி வைத்தான். இத்தகைய விளைநிலங்கள் உள்ள ஊர் ‘விக்கிரமன் குத்தாலம்’ என இன்றைக்கும் வழங்கப்படுகிறது.
அடி காண முடியா அந்த அற்புத சனீஸ்வரரின் . சனியின் நிலைகளில் ஒன்று, பாதாள சனீஸ்வரர். அதாவது, பாதாளத்தில் இருந்து புறப்பட்டு வந்தவர்.
No comments:
Post a Comment