Thursday, 30 April 2020

ஸ்ரீதேவாதிராஜன் பெருமாள் கோவில்

சுவாமி:- செங்கமல வல்லி தாயார் சமேத ஸ்ரீதேவாதிராஜன்.

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு

தேவாதி ராஜப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது.

No comments:

Post a Comment