Tuesday, 2 June 2020

வேதபுரீஸ்வரர் கோவில், தேரழுந்தூர்


சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் உருவெடுத்து, பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படி சாபம் இடுகிறார். சிவபெருமான் உமையவளைப் பசு ஆகும்படி சபித்தது தேரழுந்தூரில் தான் என்று அவ்வூர் புராண வரலாறு கூறுகிறது.

துணைவியைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு, இத்தலத்தில் மரத்தின் கீழ் அமர்ந்து வேதம் ஓதி வந்தார். அதனால் அவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

பசு வடிவம் கொண்ட உமாதேவி, திருவாவடுதுறை காட்டில் மேய்ந்து அங்கிருந்த (கோமுக்தீசுவரர் கோவில்) சிவலிங்கம் மீது பாலை சொரிந்தார். இதையடுத்து உமாதேவியின் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார்

தேரழுந்தூர் என்று இன்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மேற்கே மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் ஆலயமும் இருக்கிறது.

ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் சீர்காழிப் பிள்ளையான திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை "அழுந்தை" என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.

No comments:

Post a Comment