மயிலாடுதுறையின் வரலாற்றுச்சிறப்பு என்பது ஏதோ இன்று, நேற்றல்ல. சோழர்கள், நாயக்கர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட மராட்டியர்களிடம் இருந்த அப்போதைய மாயூரம் சுற்றுவட்டார பகுதிகள், 1799 அக்டோபர் 25 ஆம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு மாறியது. டச்சுக்காரர்களிடம் இருந்த தரங்கம்பாடியை 1845ல் ஆங்கிலேயர்கள் விலை கொடுத்து வாங்கினர். கடலோர நகரமாக, அவர்களின் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக இருந்ததால் தரங்கம்பாடியிலேயே சில காலம் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் ஜில்லா தலைநகரமாக தஞ்சாவூர் மாறியது.
முதலில் தரங்கம்பாடியும், பின்னர் தஞ்சாவூரும் மாவட்டத் தலைநகரங்களாக இருந்த காலகட்டத்திலேயே முன்சீப் கோர்ட், சப் கோர்ட், சப் கலெக்டர் அலுவலகம் என்று மாவட்டத் தலைநகருக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாயூரம் திகழ்ந்தது. அதாவது மயிலாடுதுறை நீதிமன்றமும், சப்-கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகளைத் தாண்டிய வரலாறு கொண்டவை. அதனால்தான் ஆந்திராவையும் சேர்த்து அகண்ட மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 29 ஊர்களை மட்டுமே ஆங்கிலேயர் முதன்முதலில் நகரம் என்று அடையாளம் கண்டு அந்த ஊர்களை நகராட்சிகளாக உருவாக்கினார்கள். அப்படி பழைய தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்று மாயூரம்.
1877 ல் சென்னை – தூத்துக்குடி இடையே ‘மெயின் லைன்’ என்ற பெயரில் தமிழகத்தின் மிக நீண்ட தூர ரயில் பாதை அமைக்கப்பட்டபோது அதில் முக்கியமான ரயில்வே சந்திப்பு (ஜங்ஷன்) அப்போதைய மாயூரம். அதற்கு முன்பாக 1861 ஆம் ஆண்டிலேயே மயிலாடுதுறையில் ரயில் பாதைகளைப் போட்டு ரயில்களை ஓட்டியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் (ஜில்லா போர்டு).கலாச்சார, பண்பாட்டுத் தளங்களிலும் மயிலாடுதுறை கோட்ட பகுதியின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை. தமிழின் பெரும் காப்பியமான ராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்தது இங்குள்ள தேரழுந்தூரில்தான். தமிழின் நீதி காப்பியங்களாக விளங்கும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உருவான பகுதி. கருநாடக சங்கீதத்திற்கும் முந்தையதான தமிழிசையைக் காப்பாற்றி வளர்த்த தமிழிசை மூவர் எனப்படும் ஆதி மும்மூர்த்திகளான அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகிய மூவரும் வாழ்ந்து சாதனை புரிந்தது சீர்காழியில்தான்.
இளைய கம்பர் என்று வர்ணிக்கப்பட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்ந்தது திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும்தான். அவரிடம் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர் தமிழ் படித்தது இந்த மண்ணில்தான். ‘தமிழ்ப் புதின உலகின் தந்தை’ என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் மொழியின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ உருவாக்கியது இந்த பூமியில்தான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனாரைக் கதாநாயகனாகக் கொண்டு ‘நந்தனார் சரித்திரம்’ எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் ஆனந்தாண்டவபுரத்தில் வாழ்ந்தார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல் கட்டி வணிகம் செய்த பழம்பெரும் துறைமுகம் இருந்த பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) இங்கேதான் இருக்கிறது. உலக நாடுகளின் வணிகர்கள் எல்லாம் பூம்புகாருக்கு வந்து வணிகம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். கடல்கடந்து படை எடுத்துச் சென்று ஆசிய கண்டத்தையே கைப்பிடிக்குள் கொண்டு வந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் முக்கியமான கடற்படைத்தளமான கோட்டைமேடு கொடியம்பாளையம் இங்கேதான் இருக்கிறது.
அச்சுக்கூடம், எழுத்து வார்ப்பு, காகித ஆலை ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட அச்சுத்துறையின் முன்னோடி ஊரான தரங்கம்பாடி மயிலாடுதுறை கோட்டத்தில்தான் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தியின் மனத்தில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமாக இருந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி இங்குதான் இருக்கிறது. அதோடின்றி தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த சாமி நாகப்பன் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்.
சைவத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியும், வைணவத்தில் திருமங்கை ஆழ்வாரும் அவதரித்த திருக்குரையலூரும் இங்கேதான் இருக்கின்றன. பண்டைய மருத்துவ உலகின் தலைமைப்பீடம் என சித்தர்களால் போற்றப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், ஆயுர்வேத மருத்துவத்தின் பிதாமகனாக வணங்கப்படும் தன்வந்திரி சித்தர் வாழ்ந்து சமாதியடைந்த தலமாகவும் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் புரட்சிகளைச் செய்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி,எழுத்தாளர் கல்கி (மணல்மேடு- புத்தமங்கலம்) போன்றோரும் குன்றக்குடி அடிகளார் ( திருவாளப்புத்தூர் –நடுத்திட்டு) உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்கள் தோன்றியது இம்மண்ணில்தான்.
தமிழ் வளர்த்த திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்கள் இங்கிருக்கின்றன. அறிவுக்கோயில்களாக திகழும் நூலக முறையை உருவாக்கி “இந்திய நூலகத்துறையின் தந்தை” என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதனுக்குச் சீர்காழிதான் சொந்த ஊர். நாட்டிய கலையில் தனி பாணியை உருவாக்கிய வழுவூர் ராமையாப்பிள்ளையும்இ 1947இ ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் நடந்த நாட்டின் சுதந்திர விழாவில் நாதஸ்வரம் வாசித்த ‘நாத இசைச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை, தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்(மாயவரம்).கே(கிருஷ்ணமூர்த்தி). தியாகராஜ பாகவதர்இ சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகள் உருவான பூமி இது. எண்ணங்களின் வலிமையைத் தமிழுலகுக்கு அழுத்தமாக சொன்ன புதுமைச்சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி இங்குள்ள ஆறுபாதியில் பிறந்தவர்.
குத்தாலத்திற்கு பக்கத்திலுள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களை வைத்துப் பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், பண்பாட்டு விழுமியங்களும் கொண்டதாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார்,தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகள் திகழ்கின்றன.